Wednesday, December 1, 2010

காந்தியின் அச்சம் நனவாகிறது!

சட்டீஸ்கர் மாநிலத்தில், தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதியாக இருக்கும், தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுப்பதற்காக அங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் 4 இலட்சம் பேர் துரத்தப்பட்டதையும், அவர்களின் துயரத்தையும் நமது நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கும் எடுத்த சொல்ல சென்னைக்கு வந்த காந்தியவாதி ஹிமான்சு குமார் ஒரு வரலாற்றைக் கூறினார்.


FILEஇந்தியா விடுதலை பெற்ற நாடான பிறகு, ஒரு நாள் மகாத்மா காந்தியைச் சந்திக்க வந்தாராம் பூதான இயக்கத்தை நடத்திய வினோபா பாவே. அவரிடம் பேசிய மகாத்மா காந்தி, “நமது நாடு விடுதலை பெற்றுவிட்டது. அரும்பாடுபட்டு நாம் பெற்ற இந்த விடுதலை நிலைக்க வேண்டுமானால் நமது மக்களை ஜனநாயகப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டும். அந்தப் பணியை நீங்களெல்லாம் மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்த நாட்டில் நாம் நினைக்கும் அந்த உண்மையான ஜனநாயகம் இருக்காது. ஒன்று, பெரு நிறுவனங்களின் ஜனநாயகம் (Corporate Democracy) உருவாகும் அல்லது குண்டர்களின் ஜனநாயகம் (Goondas Democracy) இருக்கும்” என்று கூறியதாக ஹிமான்சு குமார் கூறினார்.

“மகாத்மா காந்தி அவ்வாறு கூறியதற்கு இணங்கவே, வினோபா பாவே வழியில் நின்று, தண்டகாரண்ய காடுகளில் எனது ஆசிரமத்தை அமைத்து அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கிடையே தொண்டு செய்து வருகின்றேன்” என்று கூறினார் (தமிழ்.வெப்துனியாவில் அந்த செய்தியைப் பார்க்க).

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டினால் பயன்பெற்றோர் விவரங்கள், நீரா ராடியா நடத்திய உரையாடல்களில் வெளியானதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தியின் அந்த அச்சமே நினைவிற்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.இராசாவிற்கு தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தருவதில் இருந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை நடந்தேறிய பேரங்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமின்றி, இந்த நாட்டை ஆளும் அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிப்பதிலும், மாற்றுவதிலும் பெரு நிறுவனங்கள் எந்த அளவிற்கு செல்வாக்குச் செலுத்தின என்பதையும், அவைகளுக்கு வசதியாக பத்திரிக்கைகளில் செய்திகள் வராமல் இருட்டடிப்பை செய்யப்பட்டதும், அந்த பெரு நிறுவனங்கள் பெரும் பலம் அடைவதற்கென்ற அரசு அளிக்கம் சலுகைகளை நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் பேசாமல் தடுக்க கையாண்ட முறைகளும் ராடியா உரையாடல் பதிவுகளில் வெளிவந்துள்ளது.


FILEஇந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குடும்பத்தில் நடந்த மோதல், அதில் ஒருவரின் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அவர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக பத்திரிக்கைகளை பயன்படுத்த முயன்றது. அதனை முன்னவர் ராடியா உள்ளிட்ட தனது லாபியிஸ்ட்டுகளை பயன்படுத்தி, ‘பேச்சுவார்த்தைகளை’ நடத்தி இருட்டிப்பு செய்த விவரங்கள். விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, திரைமறைவில் இத்தனை திரைமறைவு வேலைகள் நடந்துள்ளது.

இதைவிட, பெரும் அதிர்ச்சி தரும் மற்றொரு திரைமறைவு பேரம்தான் மிகக் கொடியது. மத்திய அரசு கடைபிடித்துவரும் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் தொடர்பான உரிமம் (New Exploration and Licensing Policy) அளிக்கப்பட்டதில், இந்தியாவின் முதன்மையான அந்த பெரும் நிறுவனத்திற்கு வரிச் சலுகை - அதுவும் முன்தேதியிட்டு வழங்க - முன்வந்ததும், அதனை நாடாளுமன்ற விவாதத்தில் கொண்டு வந்து ‘கெடுத்து’விடாமல் இருக்க மேற்கொண்ண்ட திரைமறைவு நடவடிக்கைகளும்தான் அதிர்ச்சியளிக்கிறது. அந்த வரிச் சலுகை முன் தேதியிட்டு (Retrospective) அளிக்கப்பட்டால் அந்த முதன்மை நிறுவனத்திற்கு மட்டும் ரூ.81,000 கோடி வருமான வரிச் சலுகை கிடைக்குமாம். இந்த உண்மை பத்திரிக்கைகளில் வெளிவராமல் செய்துவிட்டதாக அந்த முதன்மை நிறுவனத்திற்கான தொடர்பாளராக செயல்பட்ட, இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அவருக்கு செயலராக இருந்த என்.கே.சிங், ராடியாவிடம் கூறுகிறார்.

அந்த உரையாடலில் ராடியாவுடன் பேசியது என்.கே.சிங்தான் என்பதை, அவருடன் கல்லூரியில் பயின்ற

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அருண் ஷோரி (ஒரு தொலைக்காட்சி பேட்டியில்) உறுதி செய்துள்ளார். பத்திரிக்கைளில் வெளிவராமல் (இந்தியாவின் ஒரு பெரும் ஆங்கில நாளிதழின் உரிமையாளரிடமே பேசிவிட்டதாக கூறுகின்றனர்) தடுத்துவிட்ட பிறகு, அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை எவ்வாறு தடுப்பது என்று என்.கே.சிங், ராடியாவுடன் விவாதிக்கிறார்.


PIBஇப்பிரச்சனையை அருண் ஷோரி கட்சிக் கூட்டத்தில் எழுப்பியதால், அவர் நாடாளுமன்றத்திலும் அது பற்றி பேசக் கூடும் என்பதால், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதலில் பேசுபவராக இருந்த அருண் ஷோரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அக்கட்சியின் முன்னாள் தலைவரான வெங்கையா நாயுடுவை (திரைமறைவு வேலை செய்து) முதன்மை பேச்சாளராக வாதத்தை வைப்பார் என்று மாற்றுகின்றனர்.

இதேபோல், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முரளி மனோகர் ஜோஷியை மக்களவையில் முதன்மை பேச்சாளராக விவாதத்தை தொடங்க வைத்து அந்த முதன்மை நிறுவனத்திற்கு அரசு அளிக்க உத்தேசித்துள்ள சலுகையை கேள்விக்கு உட்படுத்தாமல் தடுத்து விடுகின்றனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று பெருமைப்படுத்தப்படும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாடாளுமன்றம் திரைமறைவு வேலைகளால் இயக்கப்படுகிறது என்ற உண்மை இன்றுதான் முதல் முறையாக - மிக ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!

இந்தியாவின் முதன்மையான நாளேடுகளில் இன்று வெளியாகியுள்ள இந்த விவரங்கள் அனைத்தும் உண்மையென்பதும், அது இதுவரை மறுக்கப்படவில்லை என்பதும் ஒன்றை நிச்சயமாக்குகிறது. அது இந்த நாடு நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மக்கள் ஜனநாயக அரசல்ல என்பதையே.

இது ஆட்சியில் இருப்பவர்கள், அரசு நிர்வாகிகள் (Bureaucracy), பெரு நிறுவனங்கள் (Corporates) ஆகியோரின் கூட்டணி ஜனநாயமே இங்கு நிலவுகிறது. இங்கு பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே அரசியல் கட்சிகளும், ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர் என்பதற்கு இதற்கு மேல் எந்தச் சான்றும் தேவையில்லை.

இவையாவும் ஒரிரு கோடி ரூபாய்க்கு நடந்த திரைமறைவு வேலையில்லை, பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தை சலுகை என்ற பெயரால் அரசே கொள்ளை கொடுக்கும் கொடுமையாகும்.

ஒரு பக்கத்தில் நமது நாட்டின் விவசாயிகள் கடன் தொலை தாங்காமல், மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு, அதனால் இழப்பு ஏற்பட்டு சாகிறார்கள். இருபது ஆண்டுக்காலத்தில் இப்படி 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்துள்ளார்கள். மறுபக்கம், தொன்றுதொட்டு தாங்கள் வாழ்ந்த வந்த பூமியில் உள்ள வளங்களுக்காக பழங்குடிகள் - இப்படிப்பட்ட பெரு நிறுவனங்களின் கொள்ளைக்காக - விரட்டப்படுகிறார்கள்.

கடலிற்குச் சென்று மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை கரையேற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் அடித்தட்டு மக்கள் அல்லுறுகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் வளத்தையும், வரிப்பணத்தையும் மிக எளிதாக பெற்று பெரு நிறுவனங்கள் செழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் அதிகம் இடம்பெறுகின்றனர் என்று இங்குள்ள பத்திரிக்கைகள் பல பெருமையாக செய்திகளை வெளியிடுகின்றன.

No comments:

Post a Comment